நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வெளிவந்திருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்.
அம்மா, அண்ணன், தங்கை, மனைவி என அன்பு ஆட்சி செய்யும் கூட்டுக்குடும்பம் மாதவனுடையது. ஒரு அபார்ட்மென்டில் உள்ள 13-வது மாடியில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்கி குடும்பத்துடன் குடியேறுகிறார் மாதவன். அங்கு நடக்கும் வினோத சம்பவங்கள் அவரை பயமுறுத்துகிறது. அந்த வீட்டில் வழக்கத்துக்கு மாறாக பல சம்பவங்கள் நடக்கிறது.
மதியம் ஒரு மணிக்கு டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'யாவரும் நலம்' என்ற தொடரில் மாதவன் குடும்பத்தினரை பிரதிபலிக்கும் கேரக்டர்கள் வருகிறது. சீரியல் எபிசோடில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் தனது குடும்பத்திலும் நடப்பதை கண்டு அதிர்கிறார்.
ஒரு கட்டத்தில் ‘யாவரும் நலம்’ என்ற பெயரில் தன் வீட்டில் தெரியும் டிவி தொடர், மருத்துவ தொடர் என்பதும் தன் வீட்டில் மட்டுமே அது குடும்பத் தொடராக தெரிவதையும் கண்டு பிடிக்கிறார் மாதவன்.
அத்தொடரில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஒட்டுமொத்தமாக கொல்லப்படுகின்றனர்.அதுபோல் தனது குடும்பத்தினரும் கொல்லப்படுவார்கள் என்று பயப்படும் மாதவன் அதன் பிறகுதான் தன் வீட்டுக்குள் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்து, அதை குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டே அந்த அமானுஷ்ய சக்தியை எப்படி முறியடிக்கிறார், அந்த ஆபத்திலிருந்து அவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே திக் திக் திரைக்கதை.
கோர முகம், திடீரென பூனை குதிப்பது, கண்ணை உருட்டி பார்க்கும் ஆந்தை, வவ்வால் பறப்பது, நரி ஊளையிடுவது என வழக்கமான பேய் பட பார்முலா இல்லாத திகில் படம். லிப்டில் இறங்கி ஆபிஸ் புறப்படும் மாதவன், லிப்ட் வேலை செய்யாததை கண்டு படியில் இறங்கியதும் திடீரென்று அதுவேலை செய்வதில் தொடங்கும் திகில், காட்சிக்கு காட்சி இதயதுடிப்பை அதிகரிக்கிறது.
டி.வி தொடரில் வரும் 'யாவரும் நலம்' சீரியல் சம்பவங்கள் தன் வாழ்வில் நடப்பதை கண்டு அதிரும் மாதவன் அத்தொடரை படமாக்கும் ஷ¨ட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று பார்க்கும்போது அங்கு கேம் ஷோ நடப்பதை கண்டு திடுக்கிடுவதும், தன் வீட்டு டி.வியில் மட்டும் அது மாறி சீரியலாக வருவது எப்படி என்று தெரியாமல் குழம்பியதும் அரங்கே அமைதியில் மூழ்குகிறது.
மாதவனே குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்வதாக முடியும் சீரியல் கிளைமாக்ஸ், யாராலும் யூகிக்கவே முடியாத வில்லன் என படம் பறக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கும் பிளாஷ்பேக் திகில், மனநிலை பாதித்த அந்த இளைஞனின் பரிதாப கதை, வீட்டுக்குள் புகுந்துள்ள ஆவிகளை துப்பறியும் மாதவனின் ஐடியாக்கள், கதைக்குள்ளேயே நடமாடும் கொடூர கொலைகாரன் என ஒவ்வொரு திசையிலிருந்தும் ஆச்சர்யம் பிளஸ் அதிர்ச்சி அம்புகள் பாய்கிறது.
மாதவன், நாயுடன் சுற்றும் பார்வையற்ற முதியவரான சட்டர்ஜி, சரண்யா, நீத்து சந்திரா, மனநோயாளி என எல்லோருமே பாத்திரத்தோடு ஒன்றிவிடுகின்றனர். இந்து பேப்பரில் தமிழில் பிரின்ட் செய்த டி.வி.நிகழ்ச்சிகளை காட்டுவது, சீரியலில் நடக்கும் சம்பவங்களை தங்கள் குடும்பத்திலும் நடக்கிறது என்பதை வேறு யாருமே கண்டுகொள்ளாதது போன்ற சிறு குறைகள் பரபரப்பில் அடிபட்டுப்போகிறது.
தன் குடும்பத்தினரை தானே கொல்லப்போவதாக எண்ணி தன்னை தனி அறையில் வைத்து பூட்டச் சொல்லும் மாதவன், நிஜ கொலைகாரர் தன் வீட்டுக்கு சென்றிருக்கும் டாக்டர்தான் என்ற சஸ்பென்சை உடைத்ததும் எகிறுகிறது பி.பி.
மாதவனின் ‘குக்புக்’ தந்தூரி சிக்கனில் காமக்காரம். தன் கையாலேயே தன் குடும்பத்தை கொல்ல வேண்டியது வருமோ என்று மாதவன் கதறும்போது கண்ணீர் துளிகள் நம் முகத்திலும் எட்டிப் பார்க்கிறது. நீது சந்திரா வீட்டு சாப்பாடாக மணக்கிறார். ஒரே பாடலில் பாஸ்ட்புட் பீசாவாகவும் மாறுகிறார். பாடல்காட்சிகள் தவிர்க்க முடியாத திணிப்பு.
ஜிவ்வென ஏறி இறங்கும் லிப்ட், பட்டென தெறிக்கும் பல்ப் என பி.சி.ஸ்ரீராமின் கேமரா அப்ளாஸ் அள்ளுகிறது. படத்தின் ஹீரோ அவர்தான். டப்பி-பரீக்கின் பின்னணி இசை படத்துக்கு பலம். ஹாலிவுட்டுக்கு சவால்விடும் ஹாரர் மூவி என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம் டைரக்டர் விக்ரம் குமார்.