மலேசிய போலீஸ் அதிகாரியாக இருந்த சரத்குமார், பொய்யான குற்றச்சாட்டின்பேரில் தூக்கு தண்டனை கைதியாகிறார். சிறையிலிருந்து தப்பிக்கும் அவர், நிஜகுற்றவாளியான ரோகித் சாகரை தீர்த்துக்கட்டிவிட்டு இந்தியா வருகிறார்.
இந்நிலையில் பத்திரிகையன்றில் வரும் புகைப்படத்தை பார்த்து பதற்றம் அடையும் சரத், மாரடைப்பில் சாகிறார். அதிர்ச்சி அடையும் மகன் சரத், துப்புதுலக்க புறப்படுகிறார். தன் தந்தை மீது விழுந்த பழியை துடைத்து, குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் எப்படி சிக்க வைக்கிறார் என்பது கதை.
வெண்தாடியும், வெள்ளை சட்டையுமாக ஓல்டு கெட்டப்பில் வரும் சரத்குமார் புருவத்தை உயர வைக்கிறார். மீனவ கிராமத்தில் தொடங்கும் கதை சில நிமிடங்களிலேயே மலேசியாவுக்கு இடம்பெயர்ந்ததும் இறக்கை கட்டிக்கொள்கிறது.
இளம் பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் ரோகித் சாகரை, அதிரடி தாக்குதல் நடத்தி அவருக்கு தூக்கு தண்டனை வாங்கித் தரும் சரத்குமாரிடம் 'இது முடிவல்ல ஆரம்பம்' என்று ரோகித் எச்சரிப்பது திடுக். பார்ட்டி ஒன்றிற்கு சரத்குமாரை வரவழைக்கும் ரோகித் அங்கிருப்பவர்களை சுட்டுத்தள்ளி அந்த பழியை சரத் மீது போடுவது ட்விஸ்ட். தந்தை மீது சுமத்தப்பட்ட கொலைகாரன் என்ற குற்றசாட்டை துடைக்க மகன் சரத்குமார் சதுர்யமாக காய் நகர்த்துவது வேகம்.
சமுக சேவகர்போல் நடித்து மனித உறுப்புகளை திருடும் ராஜ்கோட்டிதான் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தையே மாற்றிக்கொண்ட வில்லன் ரோத் என்ற உண்மை ஆளை தூக்கிப்போடுகிறது. பர்ஸானா, நமீதா கிளாமர் போட்டி இளமை கிக். அம்மா வேடத்தில் ரொம்ப வருஷங்களுக்கு பிறகு தமிழில் தலைகாட்டுகிறார் ஜெயசுதா. சீன பெண் பின்னால் சுற்றும் விவேக், நாயிடம் கடிபட்டு சிரிக்க வைக்கிறார்.
முதல்பாதியில் காட்சிகளின் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் வேகம் கூடியிருக்கும். மலேசியாவில் போலீஸ் அதிகாரியாக இருந்த சரத், நம்மூர் மீனவர்களின் தலைவராவது எப்படி என்பதில் ஆழம் இல்லை.
இரண்டு முறை மோதியவுடன் பர்ஸானாவுடன் சரத்துக்கு காதல் வருவதும், ஒரே சந்திப்பில் நமீதாவுடன் காதல் வருவதும் சினிமாத்தனம். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் படத்தை இயக்கி ஆக்ஷன் முத்திரை குத்திக்கொள்கிறார் இயக்குனர் ஜி.என்.தினேஷ்குமார். பூபதியின் கேமரா சுழன்றிருக்கிறது.
திகட்ட திகட்ட இசை விருந்து வைத்திருக்கிறார் வித்யாசாகர்.