கொலைகார தந்தையின் மகன், தன் ஆண் நண்பருக்காக அம்மாவால் ஒதுக்கி வைக்கப்படும் மகன், பிறந்த 3 மணிநேரத்தில் காப்பகத்தில் வீசப்பட்ட குழந்தை... இப்படி பல திசைகளிலிருந்து வந்தவர்கள் படிக்கும் பள்ளியில், தாளாளர் மற்றும் மனோதத்துவ டாக்டராக இருக்கிறார் நதியா.
இவர்களில் எட்டு மாணவர்கள் மட்டும் 2 கோஷ்டியாக பிரிந்து நிற்கிறார்கள். இவர்களுக்குள் வலியில்லாத குறும்புகள் தினம்தினம் அரங்கேறுகிறது. இவர்களின் கோஷ்டி மோதல், பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டியில் தோல்வியையும் நதியாவுக்கு அவமானத்தையும் பெற்றுத் தருகிறது.
அவரின் கண்ணீர், மாணவர்கள் மனதை மாற்றுகிறது. ஒற்றுமையுடன் செயல்பட்டு பள்ளிக்கு வெற்றியைத் தேடித் தருகிறார்கள்.
இதற்கிடையில் இவர்களுக்குள் நுழைகிறாள் மாணவி கிருபா. எட்டு பேரில் ஒருவன் அவளை காதலோடு பார்க்கிறான். இன்னொருவன் சகோதரியாக பார்க்கிறான். இதை தவறாக புரிந்து கொள்ளும் காதலன் எடுக்கும் விபரீத முடிவு ஷாக் கிளைமாக்ஸ்.
கடைசி ஒரு ரீல் தவிர மற்ற ரீல்களில் நம்மை பள்ளி பருவத்துக்கு அழைத்துச் செல்லும் அந்த நாள் ஞாபகங்களை தந்திருக்கிறார் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா. விதவிதமாக சேட்டைகள் செய்வதும், அதற்கான தண்டனைகளை பெறுவதுமாக நகரும் படம், ஹீரோயின் கிருபா வருகைக்கு பிறகு காதல் வண்ணம் பூசிக் கொள்கிறது.
இனம்புரியாத பாலியல் ஈர்ப்பில் மாணவர்களின் தவிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். யாரையும் நடிகர்களாக பார்க்க முடியவில்லை. இதில் முதல் மதிப்பெண் பெறுபவர் கிருபா, வெகுளிப் பேச்சும், வெள்ளை சிரிப்புமாக மனசுக்குள் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்கிறார்.
மாணவ பட்டாளத்தில் கரைந்துபோகாமல் 8 பேரும் தங்களது முகவரியை தனித்தனியாக பதிய வைக்கின்றனர். கிருபாவிடம் மனதை பறிகொடுத்த அருண், சக மாணவர் இர்பானிடம் அவர் பழகுவதை கண்டு கொதிப்பதும், தனது தவறான செயலால் ராட்சத மணி அறுந்துவிழுந்து இறக்கும் பாலாஜியின் நினைவோடு பைத்தியமாக வாழ்வதும் மனதுக்குள் பாரம் ஏற்றுகிறது.
ஜூனியர்களை ராகிங் செய்யும் பாலாஜி கோஷ்டியிடம் சிக்கும் கிருபாவின் சுட்டித்தனம் நச். இர்பானிடம் தங்கைபோல பழகுவதை தவறாக புரிந்துகொண்டு சத்தம்போடும் அருணிடம் மனம் புழுங்குவது உருக்கம். பால்கனியில் நின்று பைனாக்குலரில் எதிர்வீட்டு பெண்ணை சைட் அடித்தும். கிருபாவை ஒரு தலையாக காதலித்தும் குறுக்குசால் ஓட்டி கவனத்தை கவர்கிறார் குரு. காதல் இல்லாமல் இளசுகள் கதையை யாரும் சொல்லிவிட முடியாது என்பதற்கு இப்படமும் விதிவிலக்கல்ல.
ஆசிரியர் பாலகிருஷ்ணன் ‘அடி’ வாத்தியார்களை நினைவு படுத்துகிறார். மாணவர் பட்டாளத்தின் அழகான கேப்டனாக நதியா, கண்டிப்பும் கனிவுமாக அவரும் மாணவியாகவே மாறுகிறார்.
விளையாட்டு போட்டியில் அவமானப்பட்டு தலைகுனிந்து நிற்கும் காட்சியில் அனுபவம் பேசுகிறது. 'அவிழ்த்து விட்ட மாடுங்க மாதிரி இப்படி அடிச்சிக்கிறாங்க...' என்று உயர் அதிகாரி திட்டியதும் அவமானத்தால் தலைகுனியும் நதியா அதே அதிகாரி முன்னிலையில் மாணவ பட்டாளம் வெற்றி பெற்றதும் நெஞ்சை நிமிர்த்தியபடி 'அவிழ்த்து விட்ட மாடுங்கன்னு சொன்னீங்கில்ல. ஒரு சின்ன கரெக்ஷன். மாடுங்க இல்ல... குதிரைங்க..' என்று கர்வத்துடன் சொல்வது புல்லரிப்பு.
டெஸ்ட் பேப்பரை கொடுக்கும் ஆசிரியர் பாலகிருஷ்ணன் மாணவ, மாணவிகளை திட்டியும் அடித்தும் துன்புறுத்தும் போது கொடூர ஆசிரியர் ஆகிறார். அதை கண்டு கலங்கும் நதியா, அவரை தனியாக அழைத்து கண்டிப்பதுடன், 'டிஸ்மிஸ் லட்டரை வாங்கிட்டு போங்க' என்று கூறுவது சுளீர். ஓவர் ஆக்டிங் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாலும், நதியாவின் நடிப்பு பசிக்கு இந்த தீனி போதவில்லை.
வானவில்லின் வர்ணங்களை வெண்திரையில் பதிய வைக்கும் கிருஷ்ணசாமியின் கேமராவுக்கு கைகுலுக்கலாம். மாணவர்களின் சேட்டைகளை அவர்கள் உயரத்துக்கு இறங்கி வந்து படமாக்கியிருக்கிறார்.
'லஜ்ஜாவதியே' பாடல் புகழ் ஜாஸி கிப்ட் இசை சாம்ராஜ்யம் நடத்துகிறார். பாடல்களை ரசிக்கலாம். நெல்லை பாரதியின், 'இஸ்பகராராரா' இளசுகளின் குதூகல குத்து.
அருண், கிருபா காதல் காட்டாய திணிப்பு. இருந்தாலும் சரியான நேரத்தில் சரியாக சொல்லப்பட்ட கதை என்றுபேரை தட்டிச்செல்கிறார் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா.