கோடீஸ்வரர் ஆசிஷ் வித்யார்த்தி, ஏழை மக்கள் நலனுக்காக 1200 கோடி ரூபாயை நன்கொடையாக கலெக்டர் கார்த்திகாவிடம் தருகிறார். அந்த பணம் முழுவதையும் செலவு செய்வதற்கான அதிகாரத்தை பிளாட்பாரத்தில் வசிக்கும் மணிவண்ணன், பிரதீப்புக்கு வழங்குகிறார் ஆசிஷ்.
இருவரையும் மிரட்டி பணத்தை சுருட்ட திட்டமிடுகிறார் அமைச்சர் ராஜன் பி.தேவ்.
இந்நிலையில் அவரை மணிவண்ணனும், பிரதீப்பும் கடத்தி சென்று ரகசிய இடத்தில் அடைத்து வைக்கின்றனர். ஒரு கட்டத்தில் ராஜன் பி.தேவ் இறந்துவிட்டதாக ஊரே நம்புகிறது. அந்த அனுதாப அலையை வைத்து தேர்தலில் வெற்றி பெற எண்ணுகின்றனர் சில அரசியல்வாதிகள்.
அவர்கள் திட்டம் நிறைவேறியதா? மந்திரியை கடத்தியவர்களின் கதி என்ன? என்பதற்கு பரபரப்பாக விடை சொல்கிறது 'நாளை நமதே'.
'ஏழை மக்களுக்காக என் சொத்திலிருந்து 1200 கோடியை ரூபாயை தருகிறேன்' என்ற அதிரடி அறிவிப்புடன் படத்தை தொடங்கி வைக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. பிளாட்பாரவாசிகள் மணிவண்ணன், பிரதீப் இருவரின் கேரக்டர்கள்தான் ஹீரோக்கள். 'நீங்கதான் 1200 கோடி ரூபாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்று கலெக்டர் கார்த்திகா சொன்னதும், 'ஐயோ, 1200 கோடியா? கோடிக்கு எத்தனை சைபருமா?' என்று மணிவண்ணன் கேட்பது கலகல.
அடியாட்களை வைத்து தாக்கிய ராஜன் பி.தேவை பிள்ளையார் சிலைக்குள் மறைத்து, மணியும், பிரதீப்பும் கடத்துவதும் அங்கு போலீஸ் அதிகாரிகள் சோதனையிடுவதும் திக்...திக். ஏற்கெனவே கடத்தி வந்த ஆசிஷை கொலை செய்து அவரது உடலை பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக, பிரதீப் கூறுவது பலே போட வைக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் ஆசிஷ் வித்யார்த்தி இருட்டறையில் அடைபட்டு கிடக்கும் சஸ்பென்ஸ் உடைவது ஷாக்.
அனாதை குழந்தைக்கு பயிற்சி கொடுத்து பங்களாக்களில் கொள்ளையடிக்கும் ஆசிஷ், தனது குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் குடிசையில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளை உயிரோடு எரிப்பது அதிர்ச்சி.
நகரத்துக்கு நடுவில் சுரங்க பாதை அமைத்து அதில் மந்திரியை கடத்தி வைத்திருப்பதாக கூறுவது காதுல பூ. சர்வானந்த், தனுஷா காதல் தேவையில்லாத இணைப்பு. தாசியாக அளப்பரை செய்கிறார் கிரண். கலெக்டர் கார்த்திகா, கோடீஸ்வரர் ஆசிஷ், மணிவண்ணன், பிரதீப் என முக்கிய வேடங்கள் எல்லோருமே பிச்சைக்காரர்கள் என்பதில் லாஜிக் இல்லை. எம்.எஸ்.பாஸ்கர், சார்லி காமெடி ரசிக்கலாம்.
காதல், அரசியல், கடத்தல், பழிக்குபழி, ரவுடியிசம், வறுமை என எல்லாவற்றையும் ஒரே கதையில் சொல்ல முயன்று குழப்பியிருக்கிறார் இயக்குனர். எந்த காட்சியும் மனதில் ஒட்டவில்லை. பழனிபாரதியின் பாடல்களுக்கு இசையால் வேகம் கூட்டுகிறார் பரத்வாஜ். ஏகத்துக்கு நீண்டு செல்லும் காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம்.