ஐ.டி. கம்பெனிக்கு எம்.டி ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர் மாதவன். அதற்காக தனது முதலாளி அப்பாஸ் என்ன சொன்னாலும் தலையாட்டுகிறார். மகளிர் விடுதியில் இருக்கும் மாடல் மம்தாவுக்கு ஆடம்பர ஆசை. ஒரு கட்டத்தில் மாதவன், மம்தா சந்தித்து தங்கள் லட்சியங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.
அப்பாஸிடம் மம்தாவை அறிமுகம் செய்து வைக்கிறார் மாதவன். ப்ளேபாய் அப்பாஸ் மம்தாவை அடைய துடிக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மாதவனிடமே சொல்கிறார். அவரும் அதற்கு சம்மதிக்கிறார்.
ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாமல் மம்தாவை காதலிப்பதை உணர்கிறார் மாதவன். இதையடுத்து அப்பாஸிடமிருந்து மம்தாவை மீட்டாரா? தனது காதலில் வெற்றி அடைகிறாரா என்பதை காமெடியாக சொல்கிறது படம்.
சீக்கிரமாக கோடீஸ்வரன் ஆக துடிக்கும் இளசுகளுக்கு பாடம் சொல்லும் படம். குரு என்று அப்பாஸ் கூப்பிட்டவுடன் 'யெஸ் பாஸ்' என்று சல்யூட் அடித்து ஆஜராகும் ஆல் இன் ஆல் கேரக்டரில் துறுதுறுக்கிறார் மாதவன். இன்டர்வியூக்கு வரும் இளம் பெண்களுக்கு ஆசை வார்த்தை கூறி, அலேக் பண்ணும் மன்மதராசாவாக அப்பாஸ். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்ணாக முத்திரை பதிக்கிறார் மம்தா. இவர்களுக்குள் நடக்கும் அசட்டுத்தனமான சேட்டைகள் கதையை நகர்த்தி செல்கிறது.
'வெளிநாட்டில் ஷ¨ட்டிங் வைத்துக்கொள்ளலாம்' என்று சொல்லி மம்தாவை கூட்டிச் செல்லும் அப்பாஸ், அவரை தனக்கு செட் அப் செய்யும்படி மாதவனிடம் கூறுவதும் முதலாளிக்காக ஒரு பக்கம் செட்டப் வேலையில் ஈடுபட்டாலும் மறுபக்கம் அதை தவிடுபொடியாக்கும் விதமாக அப்பாஸ் மனைவியை ரகசியமாக வரவழைத்து போட்டுக்கொடுப்பது, விவேக்குக்கு பெண் வேடம் போட்டு மம்தாவுக்கு பாதுகாப்பாக இருக்கச் செய்வது என்று மற்ற வேலைகளையும் செட்டப் செய்வது கலகல.
மனைவி பிருந்தா தன்னை சந்தேகப்படுவதை அறிந்த அப்பாஸ், 'மாதவனும், மம்தாவும் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க. ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வாழறாங்க' என்று பொய் சொல்லி சமாளிப்பதும், 'அப்படின்னா ரெண்டு பேரையும் இப்பவே பாக்கணும்' என்று பிருந்தா புறப்பட்டதும் அடுத்து என்ன நடக்குமோ என்று பரவுகிறது திக் திக். பேச்சு பேச்சு என்று வசனங்களால் வழியும் காட்சிகளால் நாடகத்தன்மை நிரம்பி வழிகிறது.
ஒரேநாள் மாதவன் வீட்டுக்கு செல்லும் மம்தா, மாதவனின் அம்மா ரேணுகாவின் பேச்சுக்கு கட்டுப்படுவதும், அந்த வீட்டுக்கு மருமகளாக போக வேண்டும் என்று முடிவு செய்வதிலும் வலு இல்லை. மாதவனின் காதலியான பிறகு, அவரது ஆடம்பர கம்பெனி கனவை நனவாக்க, அப்பாஸின் ஆசைக்கு இணங்க சம்மதிப்பது மம்தாவின் கேரக்டரை சின்னபின்னமாக்கிவிடுகிறது.
விவேக், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி கோஷ்டியின் காமெடி, ரகளை. வெளிநாட்டு ஷ¨ட்டிங்கில் ஆன்ட்டி கெட்டப்பில் விவேக் வருவதும், அவரை தன் கனவுக்காதலி என்று நினைத்து பாஸ்கர் உருகி காதலிப்பதும், அதையட்டி வரும் காட்சிகளும் கோடைக்கேற்ற ஜிகிர்தண்டா.