முழுக்க முழுக்க விக்ரமன் படம். 'விஜயகாந்த்-விக்ரமன்' வானத்தைப்போல படத்திற்குப் பிறகு மீண்டும் இணையும் படம். விஜயகாந்த் கட்டி இருக்கும் கதர் வேட்டி முதல்- கதை, திரைக்கதை வரை வானத்தைப்போல படத்தில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இதிலும் இருக்கிறது.
அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இழந்து, ஊருக்கு ஓரமாய் இருக்கும் ஒரு பழைய ஓட்டு வீட்டில் வசிக்கும் ஹீரோ, உயிருக்கு உயிராய் காதலிக்கும் காதலனை ஏமாற்றிவிடும் முதல் காதலி, காதல் தோல்வியில் இருக்கும் ஹீரோவை காதலிக்க வரும் ஹீரோயின், ஒரே பாடலில் கோடீஸ்வரர் ஆகிவிடும் ஹீரோ, பின்னணியில் 'லா லா' கோரஸ்... அதே கடாய், அதே அல்வா, அதே ருசி, க்ளைமாக்ஸில் சுபம்! இதுவே மரியாதை.
ஊரே கையெடுத்து வணங்கி வரும் நல்லவரு, வல்லவரு அண்ணாமலை (அப்பா விஜயகாந்த்) ஐயா. அவருக்கு, வெளியே போனா வழியனுப்பி வைக்க, படுக்கையில் கூட பட்டு சேலை உடுத்தும் மனைவி. இவர்களுக்கு ஒரு மகன். பணக்கார விஜயகாந்த் ஏழையாக மாறிவிடுகிறார், இதற்கு காரணம் காதலி. காதலிக்கிற மாதிரி நடித்து அவரிடம் இருக்கும் சொத்தை சுருட்டிக் கொள்கிறார் மீனா. இந்த உண்மை தெரிந்த மீனாவின் தோழியான மீரா ஜாஸ்மின், ஒடிந்து போய் இருக்கும் விஜயகாந்த் குடும்பத்தை மீட்டெடுக்க தன்னையே அர்ப்பணிக்கிறார்.
மீரா ஜாஸ்மின் யார் என்ற உண்மை தெரிந்தவுடன் விஜயகாந்தும் மீரா ஜாஸ்மினும் காதலிக்கிறார்கள். மீரா ஜாஸ்மின் கொடுக்கும் சின்ன யோசனையில், தனக்கென இருக்கிற தரிசு நிலத்தில் 'கிரீன் ஹவுஸ்' வைத்து முன்பு இருந்ததை விட பல மடங்கு பணக்காரர் ஆகி விடுகிறார் விஜயகாந்த். அந்த ஆண்டின் விவசாயதிற்கான ஜனாதிபதி விருது விஜயகாந்திற்கு கிடைக்கிறது என்றால் பாருங்களேன்...! இந்தக் கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல...! வழக்கமா 'ரிபீட்' அடிக்கிற வேலையை இதிலும் செய்திருக்கிறார் விக்ரமன்.
விஜயகாந்த் ஊருக்கு நல்லது செய்கிறார் என்று காண்பிக்க ஒப்புக்கு சப்பானாக வந்து போகிறார் வில்லன். கிட்ட தட்ட வில்லியாக வந்து போகும் மீனாவின் நடிப்புக்கு சபாஷ்.
ரமேஷ் கண்ணா சிரிக்க வைப்பதாக சொல்லி இருக்கையில் இருப்பவர்களை அழவைக்காதது தான் குறை. மீரா ஜாஸ்மின் நடிப்பில் அதே இளமை அழகு. அம்பிகா, பல படங்களில் செய்வதை இந்தப் படத்திலும் செய்திருக்கிறார்.
தயாரிப்பாளருக்கு படத்தின் செலவை விட விஜயகாந்திற்கு பூசப்பட்ட ரோஸ் பவுடர் செலவு அதிகமாக இருக்கும். விஜய் ஆன்டனி விக்ரமன் படத்தின் அதே 'கோரஸ் குயில்களை' வாடகைக்கு எடுத்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் 'இதயக்கனி'யின் இன்பமே... பாடலை பார்த்து ரொம்பவும் வருத்தப்பட்டிருப்பார். விக்ரமன் படங்களை பார்க்க பிடித்தவர்களுக்கு படம் பிடிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.