புரட்சித்தளபதி என்ற பட்டத்தோடு விஷால் மறுபடியும் களம் இறங்கியிருக்கும் படம் 'தோரணை'. சண்டக்கோழி, திமிரு, மலைக்கோட்டை என அதிரடி ஆட்டம் போட்ட விஷால் தோரணைன்னு வச்சிருக்காரே... யோசிப்பதற்குள், விஷாலின் அறிமுகக் காட்சியிலேயே காது ஜவ்வு கிழியுது, அவர் கால் பட்டதுமே பூமியே அதிருதுன்னா பாருங்களேன்.
சென்னையை ஆட்டிப்படைக்கிற இரண்டு முக்கிய ரவுடிகள், ஒருவர் பிரகாஷ் ராஜ் இன்னிருவர் கிஷோர். சின்ன வயசுல காணாமல் போன அண்ணனைத் தேடி சென்னைக்கு வருகிறார் விஷால். தன் நண்பன் சந்தானத்துடன் தங்கி அண்ணனை தேடுகிறார். வந்த இடத்தில் வம்பு வளர்கிற ஸ்ரேயா காதலியாகுறாங்க. நினைத்த மாதிரியே இரண்டு வில்லன்களில் ஒருவர் தான் விஷாலின் அண்ணன். அது கிஷோர். அண்ணனை திருத்தி ஊருக்கு கொண்டு போகும் சமயத்தில் க்ளைமாக்ஸ் ஃபைட்டுக்காக பிரகாஷ்ராஜின் அடியாட்கள் வழிமறிக்க, ...கடைசியில் சுபம்.
விஷாலுக்கு ஒரு பாட்டு, ஸ்ரெயாவுடன் ஐந்து டூயட், அங்கங்க ஃபைட்டு , சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் கடிக்கவும் சந்தானத்தின் காமெடி, பத்து பிஸ்டல், நிறைய ரத்தம்... இதுதான் கதை.
சிவகாசி, திருப்பாச்சி, போக்கிரின்னு எல்லா படத்தையும் அங்க அங்க வெட்டி ஒண்ணா சேர்த்தா அதுதான் 'தோரணை'. விஷால், படம் முழுக்க ஒரே காமெடி பண்ணியிருக்கார். விஜய் யாரு மாதிரி நடிக்கிறருங்கிறது வேற விஷயம், ஆனா விஷால் விஜய் மாதிரியே நடிக்கிறாருங்கிறது மட்டும் ரொம்ப உண்மை. விஷாலுக்கு எதுக்கு இந்த பில்டப்புன்னு நினைக்கும் போது, ''நீ ஒரு பில்டப் கொடுத்த, பதிலுக்கு நான் ஒரு பில்டப் கொடுத்தேன்''ன்னு படத்தின் முதல் காட்சியிலேயே அவர் பேசும் வசனம் ஞாபகத்திற்கு வருகிறது.
ஸ்ரேயாவிடம் இதற்கு மேல் காட்ட எதுவும் இல்லையோ என்னவோ, ஸ்ரேயாவோட ஸ்பெஷாலிட்டி படத்தில் மிஸ்ஸிங்க். பிரகாஷ் ராஜ் இதே கேரக்டரில் பல படங்களில் நடித்திருக்கிறார், அதில் ஒன்று தோரணை. கிஷோர் சூப்பர் நடிப்பு.
'சந்தானம், ஆர்த்தி' பண்ணுகிற காமெடி கொஞ்ச நேரத்துக்கு கல கல. பறவை முனியம்மாவிற்கு பட்டு சேலைக்கட்டி மணப்பெண் அலங்காரமெல்லாம்... ரொம்பவே ஓவர்.
மணிஷர்மா, படத்துக்கு ஏற்ற மாதிரி பாட்டு போட்டிருக்கார். நல்ல வேளை அறிமுக இயக்குநர் சபா அய்யப்பன் ரொம்ப ஃபீல் பண்ணி அம்மாவுக்கு ஒரு பாட்டு, அண்ணனுக்கு ஒரு பாட்டுன்னு ஓவரா சொரியாமல் இருந்தது ஆறுதல்!!