கோடீஸ்வரர் பி.வாசுவின் ஒரே வாரிசு மனோஜ். கார் விபத்தில் பலியாகிறார் வாசு. தலையில் பலத்த காயத்துடன் தப்புகிறார் மனோஜ்.
காயம் குணமானாலும், காலையிலிருந்து மாலைவரை என்ன நடந்தது என்பதை தூங்கி எழுந்ததும் மறந்துவிடும் விநோத நோய்க்கு ஆளாகிறார். முதல்நாள் என்ன நடந்தது? இன்று என்ன செய்யவேண்டும்? என்ற குறிப்புகளை, கேசட்டில் பதிவு செய்து, அதை டேப்ரெகார்டரில் போட்டு கேட்டு, வழக்கமான பணிகளை செய்கிறார்.
இந்நிலையில் மனோஜின் சித்தப்பா நாசர் கொல்லப்படுகிறார். அந்தபழி மனோஜ் மீது விழுகிறது. அதிலிருந்து மனோஜ் எப்படி தப்புகிறார், நிஜகொலையாளி யார் என்பது கிளைமாக்ஸ்.
ஸ்பிலிட் பர்சனாலிட்டி, ஷார்ட் டைம் மெமரி லாஸ் போன்ற ஞாபகமறதி நோய் பட வரிசையில் மற்றொரு ஞாபக மறதி கதை. கட்டுமஸ்தான உடற்கட்டுடன் களம் இறங்கி இருக்கிறார் புதுமுகம் மனோஜ். (தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன்).
படுக்கையிலிருந்து எழுந்ததுமே, 'டேய், போய் அங்கிருக்கிருக்கிற டேப் ரிக்கார்டரை போடு' என்று போர்டில் எழுதிய வாசகத்தை பார்த்துவிட்டு டேப் ரிகார்டர் சுவிட்ச்சை ஆன் செய்ததும் மறதி கதையின் முன்னுரையும் ஆரம்பமாகிறது.
அலுவலகத்துக்குள் நுழையும் மனோஜ், தனது இருக்கையை கண்டுபிடிப்பதற்காக ஆபிஸ் பாயிடம் தன் இடத்தில் தண்ணீர் வைக்கச் சொல்வதும் அவரோ எல்லா டேபிள்களிலும் தண்ணீர் வைத்து குழப்புவதும் குபீர்.
'முதலாளி உன்னை கூப்பிடுறார்' என்று சொன்னதும் நாசரின் அறைக்கு செல்லும் மனோஜ், அங்கு அமர்ந்திருப்பது சித்தப்பா என்பதை கூட புரிந்துகொள்ள முடியாமல் அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஏடா கூடமாக பதில் சொல்வது குபுக்.
காதலி ரியாசென்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ரவுடிகள் துரத்தி வர, ஜாக்கி சான் பாணியில் தெருத் தெருவாக, பில்டிங் பில்டிங்காக டைவ் செய்து எஸ்கேப்பாகி அசர வைக்கிறார் மனோஜ். சண்டை காட்சிகளிலும் ரவுடிகளை பின்னிப்பெடலெடுத்து ஆக்ஷன் ஹீரோவாகிறார்.
காற்றில் கூந்தலை பறக்கவிட்டு, மேனி பளபளக்க வரும் ரியாசென் ஜிவ். சினேகா உல்லால் ஐ.பி.எஸ் அதிகாரிக்கான விரைப்புடன் வெளுக்கிறார். கிளைமாக்ஸில் ரியா, சினேகா, மனோஜ் ஆகிய 3 பேரும் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஒருவரை நோக்கி ஒருவர் குறி வைத்து எச்சரிப்பது பரபர.
மாடலிங் டிசைனராக வரும் பிரம்மானந்தம் மாடல்களின் ஆடைகளை கத்தரித்து நீச்சல் உடையாக்கி சிரிக்க வைக்கிறார்.
முதல் நாள் நிகழ்ச்சிகளை மறந்துவிடும் மனோஜுக்கு பலகையில் எழுதி இருக்கும் வாசகங்களை மட்டும் எப்படி ஞாபகத்துடன் படிக்க முடிகிறது என்கிற முதல் குழப்பம், தொடர்ச்சியாக வருவது மைனஸ். தரண் இசையில் 'தண்ணி கருத்திருச்சி' ரீ மிக்ஸ் கும்மாங்குத்து.