கனக்கம்பட்டி கிராமத்தில் ஆடு மேய்த்தும், டீ கடை நடத்தியும் வாழ்க்கை நடத்தும் இளைஞர்கள் 7 பேர் சேர்ந்து அமைத்தது வெண்ணிலா கபடி குழு. போட்டிகளில் கலந்துகொண்டு ஒருமுறை கூட கோப்பை வெல்லாமல் ஊர் திரும்புவதில் பிரபலம்.
சொந்த ஊரில் நடக்கும் போட்டியிலாவது பக்கத்து ஊர் அணியை வெல்ல முயலும்போது எதிரணியினரின் தப்பாட்டத்தால் பகை வளர்கிறது.
இந்நிலையில் மதுரையில் நடக்கும் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க வெண்ணிலா குழுவினர் செல்கின்றனர். போட்டி விதிப்படி ஆட்டத்தில் பங்கேற்க முடியாத இக்குழுவினரை, பயிற்சியாளர் கிஷோர் விதிகளை தளர்த்தி சேர்த்துவிடுகிறார்.
முதலில் கேலிக்கு ஆளாகும் அக்குழுவுக்கு கிஷோர் தெம்பூட்டுகிறார். தன்னம்பிக்கையுடன் போராடும் குழு வெற்றிக் கோப்பையை தட்டிச் செல்கிறதா என்பது கிளைமாக்ஸ். இத்துடன் இளம் ஜோடிகளின் காதல் விளையாட்டையும் முடிச்சுப் போட்டு கமர்ஷியல் முலாம் பூசி இருக்கிறார்கள்.
டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே என நினைத்து தியேட்டருக்குள் நுழைபவர்களுக்கு திரையிலும் வித்தியாசமான அனுபவம் கிடைக்கிறது. விடலை பசங்களின் கபடியில் தொடங்கி வாலிபர்களின் துள்ளக்குள் கதையை திணித்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம் ரசிகர்களை இருக்கையிலேயே உட்கார வைக்கிறது.
தாரை, தப்பட்டை ஒலி, புதுத்துணி, ஆட்டுக்கல்லில் மாவரைப்பது, கறிச்சோறு என கிராமத்து திருவிழா காட்சிகள் தூள் பறக்கிறது.
சரண்யா மோகன் வரும் பஸ்சை சைக்கிளில் முந்தும் ஹீரோ விஷ்ணுவின் நடிப்பில் இளமை முறுக்கு. ஒரே வீச்சில் இருவருக்கும் காதல் பற்றிக்கொள்ள, அதன்பிறகு நடக்கும் காதல் சீண்டல்கள் ரசனை.
விஷ்ணுவை ஏமாற்றுவதாக நினைத்து கிராமத்து தெருக்களில் 3 மைல் தூரம் ஓடி வழிதெரியாமல் சரண்யா திண்டாடுவது குபுக்.
மதுரையில் நடக்கும் கபடி போட்டியில் கலந்துகொள்ள விஷ்ணுவும் மற்ற இளைஞர்களும் லாரி ஏறி புறப்படும்போது, இது காதல் ஜோடிகளை சேர்ப்பதற்காக போடும் திட்டம் என்று தோன்றுகிறது. ஆனால் காதல் வாடையே இல்லாமல் கபடி போட்டியிலேயே காட்சிகளை நகர்த்துவது கிக்.
வெத்து அணி என்று முதல் பாதி போட்டியில் அவமானப்படும் வெண்ணிலா குழுவுக்கு, பயிற்சியாளர் கிஷோர் தரும் ஊக்கம் பூஸ்ட். துடிப்பாக ஆடும் விஷ்ணுவை குறிவைத்து தாக்கும் எதிர்கோஷ்டி அவரது விலாவை முறிக்கும்போது வலிக்கிறது.
இறுதிப்போட்டியை நெருங்கும் வெண்ணிலா குழுவினருக்கு மத்தியிலேயே பாலிடிக்சை புகுத்தி அவர்களை பிரிக்கும் காட்சி விறுவிறு. வெண்ணிலா குழு கோப்பையை வென்றவுடன் படம் ஓவர் என்று எழுந்தால் அதன்பிறகு வரும் காதல் அதிர்ச்சி எதிர்பார்க்காத இடி.
விஷ்ணு, வைரவன், நிதிஷ், சுந்தர், அப்புக்குட்டி, சூரி, பாண்டி என அத்தனை முகங்களிலும் கிராமத்து நெடி. குறிப்பாக சூரி கொஞ்சம் குசும்பையும் சேர்த்துக்கொண்டு காமெடி காய் நகர்த்துகிறார். 50 பரோட்டா தின்னும் போட்டியில் எல்லாவற்றையும் தின்றபிறகு மறுபடியும் முதலில் இருந்து தின்கிறேன்; சரியாக கணக்கெழுதிக்க' என்று சொல்லி அரங்கில் சிரிப்பு வெடி வைக்கிறார்.
கபடியை சொல்லியிருக்கும் டைரக்டர் சுசிந்திரன், காதலைச் சொல்வதில் தடுமாறியிருக்கிறார். காதல் காட்சிகள் ‘பருத்திவீரன்’, ‘சுப்ரமணியபுரம்’ படங்களின் ஞாபகங்களை தருவது மைனஸ். வி.செல்வகணேஷ் இசையில் கிராமத்து மணம்.