மாமன் மகள் மீனாட்சியின் ஆசைப்படி அவரை சினிமாவில் சேர்த்து விடுகிறார் கனல் கண்ணன். பிரபல நடிகையானதும் பணம் தான் முக்கியம் என்று கண்ணனை விரட்டுகிறார். இந்நிலையில் மீனாட்சி கொலை செய்யப்படுகிறார். அந்தபழி கண்ணன் மீது விழுகிறது.
மனநிலை பாதித்தவர் என்று கோர்ட்டில் நிரூபிக்கப்படுவதால் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார் கண்ணன். குணமாகி வெளியில்வரும் கண்ணன் சினிமா இயக்குனர் லிவிங்ஸ்டனை தேடிச் செல்கிறார். அந்த வீட்டில் தனியாக தங்கி இருக்கும் பாரதியிடம் வம்பு செய்கிறார்.
இதற்கிடையில் இன்னும் சிலர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். அவர்களை கொன்றது யார் என்று துப்பு துலக்குகிறார் போலீஸ் அதிகாரி கே.எஸ்.ரவிகுமார். கொடூர கொலைகளை செய்த மன நோயாளி பாரதிதான் என்ற உண்மை அம்பலமாகிறது. அடுத்து நடப்பது கிளைமாக்ஸ்.
திடீரென்று வீட்டுக்குள் நுழையும் கனல் கண்ணனை பார்த்து அதிரும் மீனாட்சி, அடுத்த நொடி கொலை செய்யப்படுகிறார். ரத்த வெள்ளத்தில் மிதக்க பரபரப்புடன் தொடங்குகிறது படம். 'இவர் ஒரு மனநோயாளி' என்று குஷ்பு சாட்சி சொன்னதும் அவரை கோர்ட்டிலேயே தாக்க கண்ணன் பாய்வது விறுவிறுப்பின் தொடர்ச்சி.
மனநல மருத்துவமனையிலிருந்து தப்பிக்கும்போது தன்னை பிடிக்க வருபவர்களை தாக்கிவிட்டு பாரதியின் வீட்டுக்குள் நுழைய கண்ணன் போடும் திட்டங்களில் படபடப்பு. சந்தேக கோடுகளை கனல் கண்ணன் மீது பதிய வைத்து பிறகு அவர் கொலையாளி இல்லை, நிஜ கொலையாளி பாரதிதான் என்ற சஸ்பென்ஸை உடைப்பது திடுக்.
கொடூர கொலைகளை செய்யும் பாரதி, கனல் கண்ணன் செய்யும் ஜிம்னாஸ்டிக் சேட்டைகளை கண்டு நடுங்குவதும், தன்னை மானபங்கப்படுத்தவரும் சேது மீது கையில் கத்தி நீட்டியபடி கொலை வெறியுடன் பாய்வதுமாக இருவித நடிப்பில் பிரகாசிக்கிறார். மனநல டாக்டராக குஷ்பு, போலீஸ் அதிகாரியாக கே.எஸ்.ரவிகுமார் கதைக்கு கனம் சேர்க்கின்றனர்.
சஸ்பென்ஸ் வேண்டும் என்பதற்காக கனல் கண்ணன் ஷ¨ட்டிங்கில் கலந்துகொள்வதை மறைப்பது, பிரேத பரிசோதனை செய்த டாக்டர் மீது கே.எஸ்.ரவிகுமார் சந்தேகப்படுவது, வெளிநாட்டில் டாக்டர் கருத்தரங்குக்கு செல்வதாக கூறி குஷ்புவை அனுப்பிவைப்பது போன்ற செயற்கைத்தன காட்சிகள் மைனஸ். மீனாட்சி, கவர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறார்.
பெண்கள் மீதான கொடுமைகள் வேண்டாம் என கிளைமாக்சில் மெசேஜ் சொல்கிறார் டைரக்டர் புவனை கண்ணன். குத்தாட்ட இசையில் டாப் கியர் போட்டிருக்கும் பாலா, காட்சிகளில் டிரம்ஸ் ஒலியை எழுப்புவது நாடகத்தனம்.