வாழ இயலாத ஒருவருக்கு மரணம் வரம். அந்த வரம் கொடுக்கிற மனிதன் கடவுளாகிறான்.
இதுவே 'நான் கடவுள்'. இதுவரை தமிழ் சினிமாவில் இருந்துவந்த விதிக்கப்படாத விதிகளை சில்லு சில்லாக உடைத்து விட்டு நம்மை நிஜமான ஒரு உலகத்துக்கு எடுத்து செல்லும் வழக்கமான வேலையை செய்திருக்கிறார் பாலா.
நானே பிரம்மா, நானே ஈஸ்வரன், நானே கடவுள். மரணத்தைக் கொடுப்பவன் நானே, மறுபிறவி அளிப்பவனும் நானே, என்று சொல்லி உறவுகளைத் துறந்து காசியில் சாமியாக மாறி இருக்கும் 'ருத்திரா' தான் ஆர்யா. மகனைப் பார்க்க ருத்ராவின் தந்தை காசிக்கு வருகிறார். இந்த உலகில் உனக்கு எல்லோரும் ஒரே மாதிரி தான். உனக்கு உறவுகள் இருந்தால் நீ சாமியாக முடியாது. நீ போய் உன் உறவுகளை விட்டு விட்டு வா என்று ருத்ராவின் குருசாமி கட்டளையிட. அகோரி சன்யாசியாக இருக்கும் ருத்ரா தன் குடும்பத்தைப் பார்க்க தென் தமிழ் நாட்டின் மலைக்கோயிலுக்கு வருகிறான். நீ என்னிடம் திரும்ப வரும் நேரம் உனக்கே தெரியும் என்றும் குருஜி சொல்லி அனுப்புகிறார்.
ருத்ராவின் தோற்றத்தைப் பார்த்து திகைத்துப் போகிறாள் தாய், தான் ஒரு கடவுள் என்பதை தன் தாய்க்கு புரிய வைக்க முடியாமல் ருத்ராவும், அதைப் புரிந்துகொள்ள முடியாமல் தாயும் இருக்க. சாப்பிட உணவு என்ன வேண்டும்? என்று தாய் கேட்க, கஞ்சா இருக்கா? என கேட்கிறான் ருத்திரா. மலைக்கோவிலில் கஞ்சா கிடைப்பதை அறிந்து அங்கேயே தங்கிவிட, சடை வளர்த்து ஊரை ஏமாற்றி கோவிலுக்குள் இருந்து வரும் போலிசாமியார்கள் ருத்ராவின் மந்திரங்களையும் தோற்றத்தையும் பார்த்து, இவன் உண்மையிலேயே சாமி தான் என எண்ணி, சாமிக்கு சிஷ்யராகிறார்கள். சாமியும் கஞ்சாவை மட்டும் உணவாய்க் கொண்டு தியானம் செய்து வருகிறார்.
உடல் ஊனமுற்றவர்களை கடத்தி வந்து கூட்டு சேர்த்து தொழில் செய்து வருகிறான் தண்டபாணி (வில்லன்). உடல் நன்றாக இருந்தால்,அவர்களின் எலும்புகளை உடைத்து பிச்சைக்கு அனுப்புகிறான். தனக்கு கீழ் நான்கு பேரை வேலைக்கு வைத்து அவர்கள் ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் கொஞ்சம் ஆட்களை பிரித்து விட்டு போலீஸ் உதவியோடு பிச்சை தொழில் நடக்கிறது தண்டபாணி கும்பல். வருகிற வசூலை எடைப்போட்டுப் பார்த்தே கணக்கு போடுகிறார்கள். புதிதாக கடத்தி வருபவர்களுக்கு பிச்சை எடுப்பது எப்படி என்றும், கற்றுக் கொடுத்து கொடுமைகளை நடத்தி வருகிறார்கள்.
இந்தப் பிச்சைக் கும்பலில் வந்து சேர்கிறாள் பார்வை தெரியாத அம்சவள்ளி (பூஜா). ரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுத்து வந்த அம்சவள்ளியை பாட்டு நல்லா பாடுறா என்று சொல்லி போலீஸ் உதவியோடு இந்த கும்பலுக்கு கொண்டு வருகிறார்கள்.
கேரளாவில் இதே தொழில் செய்யும் ஒருவனுடன் தொடர்பு ஏற்பட. இந்த இருவரும் தேவைக்கு ஏற்ப ஆட்களை மாற்றிக் கொள்வதும் நடந்து வருகிறது.
இப்படி இருக்க முற்றிலும் முகம் இல்லாத ஒரு மனிதன். அதாவது முகம் குழம்பிக் கூழாகிப் போயிருக்கிற ஒருவனுக்கு உடலுறவிற்கு ஒரு பெண் தேவைப்பட. அம்சவள்ளி பத்து லட்சத்திற்கு விலைப் பேசப்பாடுகிறாள். அம்சவள்ளி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மலைசாமியிடம் சென்று கதருகிறாள். நான் சாமி இல்லை அவன் தான் சாமி, அவனிடம் போய்க் கேள் என மலைசாமி ருத்ராவை சொல்ல, ருத்ராவிடம் முறையிடுகிறாள் அம்சவள்ளி. . சாமி என்ன செய்கிறது என்பது தான் 'நான் கடவுள்'.
அநியாயம் நடக்கிறபோது, எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று எங்கேயோ இருக்கிற கடவுளை சாக்கு சொல்லாமல், அநியாயம் செய்கிறவர்களை வெட்டி சாய்த்து நாமே கடவுள் ஆனால் என்ன... என்பதைத் தான் சொல்கிறது 'நான் கடவுள்'.
ஆர்யா படத்தின் அதிகக் காட்சிகளில் இல்லை என்றாலும், வந்து போகிற அனைத்து காட்சிகளிலும் சபாஷ் வாங்குகிறார்.வசன உச்சரிப்பு, விழியசைவு, உடலசைவு , திரும்புதல், பார்த்தால், நடப்பது, ஓடுவது என எல்லா விதத்திலும் பக்கா பெர்ஃபெக்ஷன். ஆர்யாவின் மெனக்கெடல்கள் அனைத்தையும் கடைசி க்ளைமாக்ஸில் தூரத் தள்ளி விடுகிறார் பூஜா. ஆர்யாவோ பூஜாவோ படத்தில் தெரிய மாட்டார்கள் ருத்ராவாகவும் அம்சவள்ளியாகவும் அவர்கள் மாறி இருப்பார்கள். ஆர்யா ஒரு ஐந்து அல்லது ஆறு வரிகளுக்கு மட்டும் தான் தமிழ் பேசுகிறார். மற்றவை எல்லாம் மந்திரங்களும், வட இந்திய பாஷையும் தான். எழுத்தாளர் விக்ரமாதித்யன் முக்கிய கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் நயந்தாரா நடனம், சூப்பர் கலாட்டா! எங்கிருந்தோ வந்தவர்கள் கூடி ஒரே கோவில் வாசலில் பிச்சை எடுக்க, இரவு வந்ததும் ஒரே அறையில் எல்லோரும் அமர்ந்து அரட்டைகள் அடிப்பதும், பின் விடிந்ததும் எல்லோரும் பிச்சை எடுக்க போவதும் என அந்த வித்தியாச வாழ்க்கையை படம் பிடித்திருக்கும் பாலா அதை சரிவர சமரசங்கள் இல்லாமல் செய்திருக்கிறார் என்பது சபாஷ்!
இளையராஜாவின் இசை படத்துக்கு உயிர். ஜெயமோகன் வசனங்கள் படத்தோடு சேர்ந்திருக்கின்றன. யாரோ ஒருவர் கேமாராவில் பதிவு செய்ததை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர்தர் ஏ.வில்சன். படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ், கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, சண்டைப் பயிற்சியளித்த சூப்பர் சுப்பாராயன் என அனைவரும் கதைக்கு ஏற்ப தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள். பல காட்சிகளில் இறுக்கையை விட்டு எழுந்து ஐயோ கடவுளே! அவங்கள காப்பாத்துங்களேன் என கத்தத் தோன்றிவிடும். இது தான் இயக்குநரின் வெற்றி.
காட்சிக்கு காட்சி ஒரு விஷயம் வைத்திருக்கிறார் பாலா. படத்தின் ஒரு ஷாட் கூட தேவையில்லாமல் இல்லை. எந்த ஒரு கட்டத்திலும் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல் வராதது தமிழ் சினிமாவிற்கு புதுசு!
இப்படி ஒரு படைப்பை இவ்வளவு சீக்கிரம் கொடுத்த பாலாவுக்கு இன்னொரு சபாஷ்.!!
'நான் கடவுள்' - பாலாவின் பயணத்தில் இன்னொரு அத்தியாயம்!